ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பூ வியாபாரிகள்; தோவாளை மலர் சந்தை முடங்கியதால் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு

வீடுகளில் இருந்தவாறு பூ விற்பனை செய்யும் வியாபாரிகள்
வீடுகளில் இருந்தவாறு பூ விற்பனை செய்யும் வியாபாரிகள்
Updated on
1 min read

ஊரடங்கால் பூ வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தோவாளை மலர் சந்தை முடங்கியதால் ரூ.150 கோடிக்கு மேல் பூ வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய வியாபாரங்களில் ஒன்றாக மலர் வர்த்தகம் உள்ளது. இங்குள்ள தோவாளை மலர் சந்தை ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து மூடப்பட்டுள்ளது.

இதனால் பூ வியாபாரம், விவசாயம் தொடர்புடைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தொடக்கத்தில் தனிமனித இடைவெளி விட்டு சில மணி நேரம் மலர் வியாபரம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதித்தது.

ஆனால், தமிழக, கேரள வியாபாரிகள் அதிகமானோர் வருவதால் கரோனா தொற்று மலர் சந்தையில் இருந்து பரவி விடக்கூடாது என்ற பொதுநல நோக்குடன் ஊரடங்கு முடிந்த பின்னரே மலர் வியாபாரம் செய்வது என பூ வியாபாரிகள் முடிவெடுத்தனர்.

இந்நிலையில் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்கான குறைந்த அளவு பூக்களை வீடுகளில் இருந்தவாறு தொடுத்து, தனிமனித இடைவெளியுடன் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். தினசரி செலவுக்கு பணமில்லாத நேரத்தில் வேறு வழியின்றி குடிசைத்தொழில் போன்று தற்போது மலர் விற்பனையை வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தோவாளை மலர் சந்தை முடங்கியதால் ஊரடங்கு காலத்தில் தமிழக, கேரளாவை மையப்படுத்திய ரூ.150 கோடிக்கு மேலான பூ வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனிமனித இடைவெளியுடன் தோவாளை அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நாளை (மே 11)முதல் மலர் வியாபாரம் செய்ய தோவாளை ஊராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடு நடைபெற்று வந்த நேரத்தில் தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிந்த பின்னரே மலர் வர்த்தகம் தொடங்குமாறு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் தோவாளை மலர் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in