

மின்சார சட்டத்திருத்தத்தைக் கைவிட்டு மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கலாம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 10) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் வரைவு மின்சார சட்டத்திருத்தம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிடக்கூடாது.
அதாவது, இந்த புதிய மின்சார சட்டத்திருத்தத்தில் தனியார் நிறுவனங்களின் மூலமும் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்பதால் இதுவரையில் மாநிலத்தில் மின்வாரியங்களுக்கு உள்ள அதிகாரம் பறிபோய்விடும். மேலும், விவசாயப் பயன்பாட்டுக்கு மீட்டர் பொருத்தப்பட்டால், மானியம் வழங்க உச்சவரம்புகள் விதிக்கப்பட்டால் வேளாண் பணிக்கு கிடைக்கும் இலவச மின்சாரம் கிடைக்காது.
வீடு, தொழில் நிறுவனம் என பிரித்து மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்ததால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் தொழில் செய்வோர் அவரவருக்கு ஏற்ப பயன்பெற்றார்கள். ஆனால், இந்த மின்சார சட்டத்திருத்தத்தில் பயன்பாட்டுக்கு ஏற்ப மின் கட்டணம் என்றால் மின் கட்டணம் உயர வழி வகுக்கும்.
மின்சார ஒப்பந்த செயலாக்க ஆணையம் என்ற ஒரு புதிய அமைப்பினால் ஏற்கெனவே மாநில ஒழுங்கு முறை ஆணையத்திற்கு உள்ள அதிகாரங்கள் பறிபோகும். குறிப்பாக, புதிய மின்சார சட்டத்திருத்தத்தால் இலவச மின்சாரம் கிடைக்காமல் போய்விடுமோ, கட்டணம் இல்லாமல் அளிக்கப்படும் 100 யூனிட் மின்சாரம் கிடைக்காதோ, மின் கட்டணம் உயருமோ, தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தினால் மாநில அரசுக்கு உள்ள உரிமைகள் பறிபோகுமோ போன்ற சந்தேகங்கள் எழுகிறது.
இப்படி பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் போது இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வரைவு மின்சார சட்டத்திருத்தத்தில் உள்ள திருத்தங்கள் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன் தாராது என்பதால் மத்திய அரசு இம்முயற்சியை கைவிட வேண்டும் என்று தமிழக அரசும் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே மத்திய அரசு, மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மின்சாரம் தொடர்பாக மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டாம் என்பதற்காகவும், ஏற்கெனவே பொதுமக்களும், விவசாயிகளும் எப்படி பயனடைந்தார்களோ அது தொடர வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று தமாகா சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.
மேலும், மத்திய அரசு, வரைவு மின்சார சட்டத்திருத்தத்தைக் கைவிட்டு மாநில அரசுகளின் கருத்துக்கேற்ப புதிய மின்சார சட்டத்திருத்தம் கொண்டு வர முயற்சிக்கலாம்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.