Published : 10 May 2020 07:10 AM
Last Updated : 10 May 2020 07:10 AM

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் பகுதியில் ஆறுகளில் தூர்வாரும் பணி தீவிரம்- 25,000 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணி.படம்: வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறுகளில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோ றும் ஜூன் மாதம் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்போது ஆறுகள், வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகள், மண் திட்டுகளால் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க தூர் வாரி அகற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆற்றில் 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் தூர்வாரும் பணி தற்போது மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இதில், திருமலைராஜன் ஆற்றில் 15 கிலோமீட்டர் தொலை வும், முடிகொண்டான் ஆற்றில் 5 கிலோ மீட்டர் தொலைவும் ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப் படுகிறது. இதனால் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும்.

கடந்த மே 8-ம் தேதி(நேற்று முன்தினம்) தொடங்கிய இப்பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

ஜூன் 12-ல் திறக்கலாம்

மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி தமிழக அரசு திறக்கலாம் என தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள் ளது. இதுகுறித்து, அக்குழுவினர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேட்டூர் அணை நீரை மட்டும் பயன்படுத்தி சாகுபடியை மொத்த பரப்பிலும் மேற்கொண்டால் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தடி நீர், மழை நீர் மற்றும் அணை நீரை ஒருங்கிணைத்து பயன்படுத்த அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீர் வசதியுள்ள இடங்களில் எல்லாம் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே, குறுவை நாற்று விடும் பணியையும், நடவு பணியையும் முடிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கலாம்.

விவசாயிகள் முன்னேற்பாடுகள் செய்து செயல்பட வசதியாக அணை திறக்கும் காலத்தை முன்கூட்டியே, அதாவது மே 15-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். பாசன வாய்க்கால்கள், ஆறுகள், ஏரிகள் மராமத்து பணிகளை குறித்த காலத்தில் முடிக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x