Published : 10 May 2020 07:08 AM
Last Updated : 10 May 2020 07:08 AM

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு- நாளை முதல் கடைகள் செயல்பட ஏற்பாடு

திருமழிசையில் அமைக்கப்பட்டுவரும் தற்காலிக காய்கறி சந்தைக்கான பணிகள் குறித்து முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். நாளை முதல் கடைகள் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தரப்பில் கூறப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலம் அதிகளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் சூழலில் கடந்த மே.5-ம் தேதியுடன் அச்சந்தை மூடப்பட்டது. தொடர்ந்து, காய்கறி மொத்த சந்தைக்கு திருமழிசையில் மாற்று இடம் வழங்கப்பட்டு, தற்காலிக சந்தை அமைப்பதற்கான பணிகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காய்கறிகளை தேக்கி வைப்பதற்கான இடம், கழிப்பறைகள், வங்கி ஏடிஎம் மற்றும் வங்கிக்கான அலுவலக அறைகள் ஆகியவை தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.

டிஜிபி திரிபாதி, வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, வீட்டுவசதித்துறை செயலர் ராஜேஷ்லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்டவருவாய் அலுவலர் வெ.முத்துசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, அங்கிருந்த வியாபாரிகளிடம் முதல்வர் பழனிசாமிவசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று மாலையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமழிசையில் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

குலுக்கல் முறையில்..

முன்னதாக, திருமழிசை தற்காலிக சந்தையில் கடைகளைதிறப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்றது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அக்கூட்டத்தில், திருமழிசை சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 200 தற்காலிக கடைகள் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

இதுகுறித்து, காய்கறி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை (இன்று) காய்கறிகளை வரவழைத்து, நாளை (திங்கள்கிழமை) காலையில் விற்பனையை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

4 பிரிவுகள்

திருமழிசை சந்தை வளாகம், ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியமாநிலங்களில் இருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஏற்றி வரும் லாரிகள் பெரியதாக இருக்கும்.

இதனால் மற்ற கடைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால், டி பிரிவில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மட்டும் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 3 பிரிவுகளிலும் இதர காய்கறிகள் விற்கப்பட உள்ளன. மேலும் கீரைகள், புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, தேங்காய் போன்றவற்றை விற்கவும் தற்காலிக சந்தையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x