சிதம்பரம் கரோனா வார்டில் உணவு சரியில்லை எனப் புகார்: நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வர முயற்சி

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கரோனா வார்டில் உணவு சரியில்லை என நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். மருத்துவர்கள், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேசி அவர்களைச் சமாதானம் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றும் புளித்துப் போன உணவுகளை வழங்குவதாகவும், உணவுகளை மிகவும் குறைவாகத் தருவதாகவும் கரோனா வார்டு நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (மே 9) கரோனா வார்டு நோயாளிகள் சாப்பிடாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வரப் போகிறோம் என அறிவித்து வெளியே வர முயற்சி செய்தனர்.

இதனை அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் மருத்துவனைக் கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம், "தயவுசெய்து வெளியே வராதீர்கள். இது சமூகத் தொற்றாக மாறிவிடும், உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாங்கள் முழு முயற்சி எடுக்கிறோம்" என உறுதி அளித்தனர்.

"உணவு குறித்து புகார் இருந்தால் எனது தொலைபேசி எண்ணுக்குத் தகவல் கொடுங்கள். உங்களின் புகார் உடனே சரிசெய்யப்படும்" என சிதம்பரம் டிஎஸ்பி கூறி அவரது தொலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

பின்னர் மருத்துவமனையில் உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை அழைத்து சரியான முறையில் உணவுகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நோயாளிகள் அமைதியாக வார்டில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in