

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது.
குறிப்பாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் தட்பவெட்டம் காணப்படுகிறது.
கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, குலசேகரம் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின.
அதிகபட்சமாக மயிலாடியில் 113 மிமீ., மழை பெய்திருந்தது. சிற்றாறு இரண்டில் 82 மிமீ., குழித்துறையில் 77, கொட்டாரத்தில் 73, சிற்றாறு ஒன்றில் 38, நாகர்கோவிலில் 41, தக்கலையில் 24, இரணியலில் 20, மாம்பழத்துறையாறில் 20, பாலமோரில் 10, ஆரல்வாய்மொழியில் 15, கோழிப்போர்விளையில் 30, அடையாமடையில் 19, குருந்தன்கோட்டில் 40, முள்ளங்கினாவிளையில் 10, ஆனைகிடங்கில் 31 மிமீ., மழை பெய்திருந்தது.
கனமழையால் குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வெப்பம் வாட்டி வதைக்கும் கோடைகாலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து குளிர்ச்சியடைய செய்துள்ளதால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.