Last Updated : 09 May, 2020 03:59 PM

 

Published : 09 May 2020 03:59 PM
Last Updated : 09 May 2020 03:59 PM

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதன் காரணம் என்ன? - அரசிடம் கேட்ட மத்திய சுகாதாரத்துறை

புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் இங்கு குறைவாக இருக்க காரணம் என்ன என்று மத்திய சுகாதாரத்துறை புதுச்சேரி அரசிடம் கேட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா நிலவரம் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (மே 9) கூறியதாவது:

"புதுச்சேரி கதிர்காமம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழைய நோயாளி ஒருவருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. மீண்டும் பரிசோதனை செய்து அதில் கரோனா தொற்று இல்லாவிட்டால், மருத்துவமனையில் இருந்து அவர் அனுப்பப்படுவார்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற திருபுவனை குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதுபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் கீரைகளைத் தட்டுவண்டியில் ஏற்றிச்சென்ற வேலை செய்து வந்த செல்லிப்பட்டையைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி வந்தார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

தற்போது இப்புதிய நோயாளிகள் இரண்டு பேருடன், பழைய நோயாளி ஒருவரும் சேர்த்து மூன்று பேர் புதுச்சேரியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாஹே, ஏனாம், காரைக்கால் பிராந்தியங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படுபவர்கள் தமிழ்நாட்டு நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இந்நிலையில், வெளிமாநிலங்களில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த 2,500 பேர் புதுச்சேரிக்கு வர அனுமதி அட்டையும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர்களது முழு முகவரி இல்லை, ஏரியா பெயர் மட்டுமே உள்ளது. அவர்கள் அனைவரையும் ஒரே பேருந்தில் அழைத்து வருவது சிக்கல். அதனால், புதுச்சேரி மக்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளனர் என அறிந்து அவர்களை அழைத்து வருவது குறித்து விவாதித்து முடிவு எடுப்போம்.

தமிழக மக்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு சற்று தளர்வு கொடுத்துள்ளோம். அதையே புதுச்சேரி மக்களும் கேட்டால் பெரிய பாதிப்பு வரும். எனவே இன்னும் ஒரு வார காலத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது வரை புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் 3 பேரே உள்ளனர்.

புதுச்சேரி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா நோயாளிகள் அதிகம் பேர் உள்ள நிலையில் புதுச்சேரியில் குறைவாக இருப்பதன் ரகசியம் என்ன, உண்மையான கணக்கைத்தான் கூறுகிறீர்களா? என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டனர்.

புதுச்சேரி சிறிய பகுதி, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வழிகள் அனைத்தையும் அடைத்துக் கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளோம் என்று தெரிவித்தேன். மேலும், காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்நிலை உள்ளது.

தமிழக நோயாளிகளைப் புதுச்சேரிக்குள் அனுமதிக்க முடிவு செய்தாலும், வருபவர்கள் அனைவரும் சிகிச்சை தேவைப்படுபவர்கள்தானா? என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் சாலைகளின் எல்லைகளில் வருபவர்களை பரிசோதித்து உள்ளே அனுமதிப்பதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுடன் இணைந்து குழுக்களை அமைத்துள்ளோம்.

17-ம் தேதிக்குப் பின்னர் கட்டுப்பாடுகளைத் தொடர முடியாது. எனவே, மக்கள் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, சுத்தமாக இருப்பது ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்"

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x