

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக மக்களிடம் விளம்பரம் தேடுவதற்காகவே திமுக போராட்டம் நடத்தியதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கயத்தாறு, கடம்பூர் மற்றும் கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இதில் பூ, பந்தல் அமைப்பு, சுமைதூக்கும் தொழிலாளர்கள், தையல், மண்பாண்டம், கூடை பின்னுதல், இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் என 1,652 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்குவதை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5,338 பேரின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதலில் 27 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதில், ஒரு பெண் இறந்த நிலையில், 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதன் பின்னர் தொடர்ந்து 15 நாட்கள் தொற்று இல்லாத நிலை இருந்தது.
75 சதவீத ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் தலைநகர் சென்னையிலிருந்து வந்தவர்களில் புதிதாக கடந்த வாரம் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
இதில், 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும். தலைநகர் சென்னையில் இருந்து வருவோர் கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதற்காக மாவட்ட எல்லைகள் மற்றும் குறுக்குச்சாலைகளில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மாவட்டத்தில் தொற்று வருவது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அனுமதியின்றி யாரும் வந்து இருந்தாலும், உடனடியாக மக்கள் வருவாய்த்துறை அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சொந்தமாக மதுபானம் தயாரிப்பு ஆலைகளை நடத்தி வருகின்றனர் என்பது ஊரறிந்த உண்மை.
அதுமட்டுமில்லாமல், அவர்கள் ஊரை ஏய்ப்பதற்காக, மக்களிடம் விளம்பரம் தேடுவதற்காக கருப்புச்சட்டை அணிந்து இருந்தார்களே தவிர, அவர்களது தொண்டர்களுக்கு டாஸ்மாக் கடை பக்கம் யாரும் செல்லக்கூடாது என வேண்டுகோள் விடுக்க முடிந்ததா அல்லது கட்டுப்படுத்த முடிந்ததா என்பதுதான் மக்களின் கேள்வி. இது அரசியலுக்காக பயன்பட்டது" என்றார் அவர்.