Published : 09 May 2020 01:25 PM
Last Updated : 09 May 2020 01:25 PM

சென்னை எல்லைக்குள் இருப்பதால் மூடிக்கிடக்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டை; தொழிலாளர்களுக்காக இயக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். குடியிருப்புகளும் கிடையாது. வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிற்கூடங்களிலேயே இருக்கின்றார்கள். அங்கே தொழில்களை இயக்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பெருந்தொழில் நிறுவனங்களான ஹூண்டாய், அசோக் லேலண்ட், ரெனால்ட் நிஸ்ஸான் மற்றும் அவர்களுடைய முதல்நிலை உதிரி பாகங்கள் ஆக்கும் தொழிற்கூடங்கள், பகுதி அளவில் இயங்குவதற்கு தமிழக அரசு இசைவு அளித்து இருக்கின்றது. அவர்களும் பணிகளைத் தொடங்கி விட்டார்கள்.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிய, சிறு குறு நடுத்தரத் தொழில நிறுவனங்களும் பணிகளைத் தொடங்கிவிட்டன.

ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலைத் தொடங்க முடியவில்லை. இவர்கள்தான், மேற்கண்ட பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஆக்கித் தருகின்றார்கள்.

அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்குக் கொடுத்து இருக்கின்ற உதிரி பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றார்கள். மற்றவர்களும், மாற்றி விடக்கூடும்.

அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். ஏற்கெனவே கடந்த 45 நாள்களாக தொழில் முடக்கத்தால், பெரும் இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே இருந்தாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். குடியிருப்புகளும் கிடையாது. வடமாநிலத் தொழிலாளர்கள் தொழிற்கூடங்களிலேயே இருக்கின்றார்கள்.

அங்கே தொழில்களை இயக்குவதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. கரோனா பரவலைத் தடுக்க, சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். இது தொடர்பாக, அம்பத்தூர் தொழில்முனைவோர்கள் தமிழக அரசை பலவாறு அணுகியும், இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x