கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு மே 17-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 4-ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகள், சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோயில், மசூதி மற்றும் தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மே 9) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் நிதி நிலைமை பாதிக்கப்படுகிறது என்று சில நிறுவனங்களை இயக்க அனுமதித்த தமிழக அரசு, மனதளவில் பாதிக்கப்பட்டும், நிம்மதி இழந்திருக்கும் தன்னைப் போன்றவர்களுக்கு மத வழிபாட்டுத் தலங்கள், ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்புக் காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று வர முடியவில்லை என்றும், முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்குச் சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் மே 11-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in