

வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலையின்றியும், ஊர் செல்ல முடியாமலும் தவித்து வந்தவர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு, அரசு சார்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 1,140 தொழிலாளர்கள், கோவை ரயில் நிலையத்திலிருந்து பிஹார் மாநிலம் சகார்ஷாக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
முன்னதாக, ரயில் நிலையம் வந்தவுடன் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என்பதால், 72 படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியில் 52 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில், முதல்கட்டமாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் 120 பேர், 4 பேருந்துகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 3,700 தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் இருந்து, வெளி மாநிலத்தவர் 2,475 பேர், மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து 1,200 பேர், தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்பித்த தொழிலாளர்களில் முதல் கட்டமாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 120 பேர் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து 4 பேருந்துகள் மூலமாக, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.