

கரோனா வைரஸ் பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று கட்டுக்குள் இருந்தது. அந்த நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட் வைரஸ் தொற்று மையமாக உருவெடுத்தது. மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
முதலில் சென்னையிலும் அடுத்தடுத்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் பரவியது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.
அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு
இதற்கிடையே, தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை உரியமுறையில் எடுக்காததால் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் பாதிப்பின் உண்மை நிலவரம்மறைக்கப்படுவதாகவும் தமிழக அரசுமீது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதை முற்றிலும் மறுத்துள்ள தமிழக அரசு, இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக ஆய்வகங்கள் இருப்பதாகவும் பரிசோதனைகளும் அதிகமாக செய்யப்படுவதாகவும் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்துசென்னை வந்த காஞ்சிபுரம் பொறியாளர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தில் மட்டுமே தினமும் 10 நபர்கள் வரை கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால், சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனை தொடங்கப்பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன. பின்னர்,அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தற்போதைய நிலையில், 36 அரசுமருத்துவமனைகள், 16 தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார்ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 2.10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. தினமும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பரிசோதனை செய்வதற்கு 52 ஆய்வகங்கள் உள்ளன. அதேபோல், தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகள் அதிகமானதால், பாதிப்பும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும் 2-வது இடத்தில்குஜராத்தும் உள்ளன. இறப்பு எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங் களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.