

மதுக்கடையை மூட உயர் நீதிமன்றம் வழங்கியை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த முயற்சியை கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“மக்கள் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
கடந்த 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அதிமுக அரசின் அறிவிப்பை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக்கு கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக நீதிமன்ற தீர்ப்பை கருதுகிறோம்.
எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த முயற்சியை கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் சமூகப்பரவலை சீர்குலைத்து கொரோனா நோய் பரவலுக்கு துணை போன காட்சிகளை பார்த்து தமிழக மக்கள் அச்சமும் பீதியும் அடைந்தார்கள்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக பரவல் பாதிக்கப்பட்டதை அறிந்து அந்த கடைகளை மூடிய தமிழக அரசு, அதே போல கொரோனா பரவலுக்கு காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட மறுப்பது ஏன்? கோயம்பேடு கடைகளுக்கு ஒரு நீதி. டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு நீதியா?
எனவே, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று, டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.