

‘கரோனா’ ஊரடங்கால் மக்கள் நடமாட்டமும், வாகனப்போக்குவரத்தும் குறைந்தது. அதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு குறைந்து சுத்தமான காற்று வீசியது. ஆனால், சீதோஷனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
கடந்த கால் நூற்றாண்டிற்கு முன் வரை கோடை சுற்றுலா செல்வதற்கு மக்கள் விரும்பும் இடங்களில் ஊட்டி, கொடைக்கானல், சிறுமலை முக்கியமானது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை, அங்கு காணப்படும் குளிர்ந்த சீதோஷனநிலையும், ரம்மியமான இயற்கை அழகையும் கண்டு ரசிக்கவும், அனுபவிக்கவும் செல்வார்கள்.
இதில், ஊட்டி, கொடைக்கானல் உலக சுற்றுலாப்பயணிகளை சுண்டி இழுக்கக்கூடிய சர்வதேச சுற்றுலா ஸ்தலங்கள். பெரும் பணக்காரர்கள் முதல் அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் வரை இந்த இரு கோடை வாஸ்தலங்களிலும் பண்ணை வீடுகள், பண்ணை தோட்டங்கள் வாங்கி குவிந்தனர்.
அவர்களும் ஆண்டிற்கு ஒரிரு முறை இந்த பண்ணை வீடுகள், தோட்டங்களுக்கு வந்து சென்றனர். சினிமா படப்பிடிப்புகளும் இங்கு அதிகளவு நடந்தன. தற்போது கொடைக்கானலின் ‘சீதோஷனநிலை மாறிவிட்டது.
அதனால், பிரபலங்கள் முன்போல் இங்கு வந்து தங்குவதில்லை. வெளிநாட்டு சுற்றலாப்பயணிகள் வருகையும் முன்போல் இல்லை. இதற்கு, சுற்றுலா போர்வையில் கோடைவாஸ்தலங்களில் காடுகள் அழிக்கப்பட்ட காங்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்ததே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கொடைக்கானலில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் முன்பு எளிதானது அல்ல. மாஸ்டர் பிளான் என்ற விதிமுறை அடிப்படையில் ஆட்சியர் தலைமையிலான கமிட்டி அப்ரூவல் கொடுத்தால் மட்டுமே கட்டிடங்கள் கட்ட முடியும் நிலை இருந்தது.
இந்த "மாஸ்டர் பிளான்' விதிகளை மீறி, கொடைக்கானலில் கடந்த 25 ஆண்டுகளில் புற்றீசல் போல் கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. நீர் ஆதாரப்பகுதிகள், மலைச்சரிவுகள் மற்றும் மண் சரிவு அபாயம் மிகுந்த பள்ளதாக்குப் பகுதியில் பங்களாக்கள், வணிக வளாகங்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன.
"மாஸ்டர் பிளான்' விதிமுறைப்படி, கொடைக்கானல் நகரில் 14 மீட்டர் உயரம் வரையே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். இதை மீறி 20 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
தரைத்தளம், மாடி என இரு தளம் கொண்ட வீடுகள் மட்டுமே கட்ட முடியும். ஆனால், அதையும் தாண்டி ஐந்து மாடிகள் வரை கூட கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிடங்களை பொறுத்தவரையில் 2,500 சதுர அடி அளவில்தான் கட்ட வேண்டும். நீர் பிடிப்பு பகுதியில் 1700 சதுர அடிக்குள்தான் கட்ட வேண்டும்.
ஆனால், 5,000 முதல் 25,000 சதுர அடி வரை கட்டிடங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. அப்பட்டமாக விதிமுறை மீறி கட்டப்படும் இந்த கட்டிடங்கள் மீது அரசியல் பின்னணியால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.
அதனால், தற்போது கொடைக்கானல் இயல்பான அழகை இழந்து கோடைவாஸ்தலம் என்ற அந்தஸ்தையும், சர்வதேச சுற்றுலா ஸ்தலம் என்ற பெருமையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில் ‘கரோனா’ ஊரடங்கால் மக்கள் நடமாட்டமும், வாகனப்போக்குவரத்தும் குறைந்தது. அதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு குறைந்து சுத்தமான காற்று வீசியது. ஆனால், சீதோஷனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
வாகனங்கள் வராததால் வெறும் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே கொடைக்கானலில் குறைந்துள்ளது. சீதோஷனநிலை இந்த கோடையில் எப்போதும் போலவே உள்ளது.
கொடைக்கானல் சூரியவியல் ஆராய்ச்சியாளர் பி.குமரவேல் கூறுகையில், ‘‘ கொடைக்கானலில் எப்போதும் போல்
சீதோஷன நிலை உள்ளது. கோடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் வரை ஜூன் வரை சுற்றுலாப்பயணிகள் வருகை, வாகனப்போக்குவரத்து அதிகரிப்பால் 1 ½ முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடும். தற்போது வழக்கமாக இந்த காலத்தில் இருக்கும் வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைந்து 21 டிகிரி செல்சியஸாக உள்ளது.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டம் குறைந்தும் வெறும் 2 டிகிரி மட்டுமே குறைந்துள்ளது. இதுபோன்ற கோடை சீசன் நேரத்தில் நகர்பகுதியில் 2 டிகிரி கூடும். இந்த ஆண்டு அது கூடவில்லை. சீதோஷனநிலையில் பெரும் மாற்றம் இல்லாவிட்டாலும்
நிறைய புது வகையான பறவைகள் கொடைக்கானல் வரத்தொடங்கியுள்ளன, ’’ என்றார்.