மதுக்கடைக்குப் போட்டியாக டீக்கடை: திருச்சி திமுக பிரமுகரின் நூதனப் போராட்டம்

மதுக்கடைக்குப் போட்டியாக டீக்கடை: திருச்சி திமுக பிரமுகரின் நூதனப் போராட்டம்
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் மதுக்கடைக்கு எதிராக டீக்கடை திறந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் என்பவர் தன்னுடைய ஊரான எடமலைப்பட்டி புதூர் பகுதியில் டாஸ்மாக் திறக்கும் அதே நேரத்தில் டீக்கடை திறக்கும் போராட்டத்தை இன்று நடத்தினார். அங்கு பலரும் வந்து டீக்குடித்து போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.
இப்படி மதுக்கடைக்குப் பதிலடியாக டீக்கடை திறப்புப் போராட்டம் நடத்தப்பட்டதை சற்றும் எதிர்பார்க்காத எட்மலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் அங்கு வந்து டீக்கடை திறந்த முத்து செல்வம் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

இது குறித்து முத்து செல்வத்திடம் பேசியபோது, "தமிழக அரசு பொதுமுடக்கம் அமலில் உள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் கடையைத் திறந்து வாழ்வாதாரம் இழந்த பலரை மேலும் படுகுழியில் தள்ளுகிறது. மதுக்கடையைத் திறந்தவர்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரமான டீக்கடையைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக பாமரர்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான டீக்கடையைத் திறக்க முடிவெடுத்தேன். எங்கள் பகுதியில் டாஸ்மாக் திறக்கும் அதே நேரத்தில் டீக்கடையைத் திறந்தோம்.

காலை 10 மணிக்கு ஒரு கேனில் டீ கொண்டு வரப்பட்டு, அதில் ரிப்பன் வெட்டி நானே கடையைத் திறந்து அரசு சொன்ன தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து டீ விற்பனை செய்தேன். அமோகமாக விற்பனை ஆனது. ஆனால், மதுக் கடைக்கு ஷிஃப்ட் போட்டு காவல் காக்கிற காவல்துறையினர் இங்கு வந்து டீ கேனைப் பறிமுதல் செய்ததுடன் எங்கள் மீது வழக்கும் பதிந்துள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in