

டாஸ்மாக்கை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதற்கு கமல் பெருமிதத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காலகட்டத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. காலை முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் நின்ற வீடியோக்களும், பலர் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துகிடந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் திறப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை (மே 9) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது. ஆன்லைன் மூலம் விற்று டோர் டெலிவரி செய்யலாம். டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையும் சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. 'மக்கள் நீதி மய்யம்' மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்"
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்