

மதுவுக்கு எதிரான களத்தில் இப்போது மீனவ கிராமங்களும் தங்களை ஒப்புக் கொடுத்துள்ளன. அதில் கவனத்தைக் குவிக்கும் கிராமமாக இருக்கிறது கடியப்பட்டிணம் மீனவ கிராமம்.
குமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தின் தேவாலயப் பங்கு நிர்வாக இளைஞர்கள் சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை எதிர்த்து இன்று வீடுகளில் இருந்தவாறே கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ‘மதுக்கடைகளை திறக்காதே... கரோனாவைப் பரப்பாதே’ என்னும் விழிப்புணர்வு அட்டையோடு நின்ற கடலோடி கடிகை அருள்ராஜ் ’இந்து தமிழ்’ திசையிடம் கூறுகையில், ‘எங்கள் ஊரான கடியப்பட்டிணத்தில் புனித அகஸ்தினார் மதுவிலக்கு சபை என்ற பெயரில் மதுவுக்கு எதிரான இயக்கம் வைத்துள்ளோம். குடித்துவிட்டுக் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்போரை இந்தக் குழு கண்காணிக்கும். அவர்களைக் குடும்பத்தினரின் சம்மதத்தோடு எங்கள் ஊரின் அருகில் இருக்கும் விடிவெள்ளி போதை நோய் மீட்பு ஆசிரமத்தில் சேர்ப்போம்.
அங்கு மதத்தைத் தாண்டிய வாழ்வியல் போதனைகளும், கவுன்சலிங்குமாக பத்து நாட்கள் நகரும். அதன் பின்னர் மீண்டுவரும் பலரும் குடியை விட்டிருக்கின்றனர். எங்கள் ஊர் மதுவிலக்கு சபையின் தலைவராக இருக்கும் அலெக்ஸே குடிநோயாளியாக இருந்து மீண்டுவந்தவர்தான்.
இருபது வயதில் இருந்து குடிக்கத் தொடங்கிய அவர் 62 வயதில் திருந்தியவர். குடியால் திருமணமும் செய்து கொள்ளாதவர். வாழ்வின் பெரும் பகுதியைக் குடியால் இழந்த வருத்தத்தை எப்போதும் பதிவு செய்பவர்.
இதேபோல் எங்கள் கிராமத்தின் பங்குப் பேரவை இளைஞர்களும் மதுவுக்கு எதிராகத் தீவிரமாகச் சில முன்னெடுப்புகளை செய்கின்றனர். அதன் ஓர் அங்கம்தான் வீட்டில் இருந்தே எதிர்ப்பு தெரிவிப்பது! அரசு திடீரென மதுக்கடைகளை திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு எதிராக எங்கள் கிராமத்தினரின் சிறிய எதிர்வினை இது” என்றார்.