Last Updated : 08 May, 2020 07:09 PM

 

Published : 08 May 2020 07:09 PM
Last Updated : 08 May 2020 07:09 PM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்: நிர்வாகம் தந்த உறுதியை ஏற்று பணிக்குத் திரும்பினர்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பணியாளர்களின் பாதுகாப்புக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து வேலை நிறுத்தம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கிருஷ்ண மோகன் வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவமனையை கடலூர் மாவட்ட கரோனா மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்து, மருத்துவமனை சிறப்பாக கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை நோய் பாதித்தவர்கள் 26 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்சமயம் 60 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (07-05-2020) 4 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்களுக்குக் கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இதனால் மனரீதியாக அச்சமடைந்து சில செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களின் பாதுகாப்பினை மேம்படுத்துமாறு இன்று (08-05-2020) கோரிக்கை விடுத்தனர். அதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

பாதுகாப்பு மேலும் செம்மைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மேலும், மருத்துவ சிப்பந்திகளின் பணியில் பாதுகாப்பு உறுதி செய்ய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையில் அனைவரும் அதனை ஏற்றுப் பணிக்குத் திரும்பினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x