Published : 08 May 2020 06:36 PM
Last Updated : 08 May 2020 06:36 PM

ஓசூர் எல்லையில் ஆன்லைன் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் வெளி மாநிலங்களில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களுக்கு தமிழகப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கும் ஆன்லைன் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆகியோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 1-ம் தேதி முதல் மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக தமிழகம் வரத்தொடங்கி உள்ளனர்.

இதில் பெங்களூரு வழியாக தமிழக எல்லை நகரமான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடிக்கு வருபவர்களின் தகவல்களைப் பதிவு செய்து தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கவும், மேலும் வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களின் தகவல்களைப் பதிவு செய்து அனுமதி வழங்கவும் ஆன்லைன் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு மையம் செயல்படத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் கூறியதாவது:
’’ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழகம் வருபவர்களுக்கு வெளி மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள அனுமதிச் சீட்டு பரிசீலிக்கப்பட்டு, அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. பின்பு அவர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதிகளுக்குச் செல்கிறார்களோ அந்தப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அவர்களுக்கு கரோனா தொற்று குறித்த பரிசோதனை நடத்தப்படும். அவர்களுக்குக் கரோனா அறிகுறி தெரியவந்தால் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இந்த ஆன்லைன் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு மையப் பணிகள் தமிழக எல்லையில் உள்ள ஜுஜுவாடி சோதனைச்சாவடி உட்பட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணிநேரமும் நடைபெறுகின்றன’’.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x