Published : 08 May 2020 05:26 PM
Last Updated : 08 May 2020 05:26 PM

நூரே கிழங்கு, சீங்கை கீரை: பழங்குடிகளைப் பண்டைய உணவு முறைக்குத் திருப்பிய கரோனா!

நூரே கிழங்குகளுடன் பழங்குடி இளைஞர்கள்.

“கரோனாவால எங்க வாழ்க்கையே மாறிப்போச்சு. ரேஷன் அரிசி, பருப்பு, எண்ணெய் அரசாங்கம் தருது. அதுக்கு மேல கட்சிக்காரங்களும் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்துட்டுப் போறாங்க. அதுல எல்லாம் இல்லாத சத்து இந்தக் கிழங்குல இருக்கு சாரே. இதெல்லாம் சாப்பிட்டுத்தான் எங்க பாட்டன், முப்பாட்டன் ஒடம்புல நோய் எதிர்ப்பு சக்திய வளர்த்துட்டாங்க. எந்த நோயும் இல்லாம நூறு வருஷம் வாழ்ந்தாங்க” என்று உற்சாகமாகப் பேசுகிறார் தமிழ்நாடு ஆதிவாசிகள் ஃபெடரேஷனின் முன்னாள் மாநிலச் செயலாளர் தூவைப்பதி பாலன். அவர் குறிப்பிடுவது நூரே கிழங்கை.

கோவையின் மேற்கு கோடியில் உள்ளது ஆனைகட்டி. அதைச் சுற்றி உள்ள தூவைப்பதி, ஆரநாட்டுக்காடு, தூமனூர், சேம்புக்கரை, பனப்பள்ளி, ஆலமரமேடு, ஜம்புகண்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி கிராம மக்கள் இந்தக் கிழங்கைத் தோண்டியெடுத்து தீயில் சுட்டு, நீரில் வேகவைத்துச் சாப்பிடுவது தற்போது தினசரி வாடிக்கையாகி இருக்கிறது. இதுபோலவே வத்தலக்கொடி கிழங்கு, சீங்கை கீரை, பொதிக்கீரை என பல்வேறு வகைக் கீரைகளையும் வேகவைத்து, மிளகாய், வெங்காயம் போட்டுக் கடைந்து சாப்பாட்டுக்குக் குழம்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

“பொதுமுடக்கத்தால் தோட்டத்து வேலை, 100 நாள் வேலை, செங்கல் சூளை வேலை என எதுவுமே இல்லை. ஊருக்குள்ள சும்மாவே எப்படியிருக்கிறதுன்னு ஆத்துப்பக்கமா கிழங்கு தோண்ட வந்துடறோம். அந்தக் காலத்துலயிருந்து எங்காளுக சாப்பிடறது நூரே கிழங்கைத்தான். அஞ்சடி ஆழத்துக்கு கீழ தோண்டணும். ஒரு அடியிலிருந்து கிழங்கு நீளமா இருக்கும். மரவள்ளிக் கிழங்கோட தோல் தடிமனா இருக்கும். ஆனா, இந்தக் கிழங்கோட தோல் ரொம்ப மெல்லிசா இருக்கும். கையாலேயே உடைச்சிடலாம். இதை வேகவச்சு, தீயில வாட்டி சாப்பிடலாம். அதுல உப்பு, காரம் எதுவும் சேர்க்க மாட்டாங்க.

ஆதிகாலத்துல சாப்பிட்டுட்டு இருந்தாங்க. இடைப்பட்ட காலத்துலதான் தொழில் மாறிடுச்சு. செங்கல் சூளை, 100 நாள் வேலைன்னு போனதால அதை மறந்துட்டாங்க. இப்ப நேரம் கிடைச்சுது. பழைய ஞாபகம் வந்துடுச்சு. கிழங்கு தோண்டப் போறாங்க. சேம்புக்கரை, தூவைப்பதி, தூமனூர், மூலகங்கல் காடுகள்ல இது நிறைய கிடைக்குது. எல்லோரும் டிவிய பார்க்குறாங்க. அதுல இந்த நோயைப் பத்தி புரிஞ்சுக்கிறாங்க. யாரும் வெளியே போகக் கூடாது. ஒருத்தரோட ஒருத்தர் ஒட்டக்கூடாது. ஆறடி தள்ளி நிற்கணும்னு அவங்களே அப்படி நடந்துக்கிறாங்க. அதுபோல கீரை வகைகள் சாப்பிட்டா உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி வரும், கரோனா வராதுன்னு கீரை பிடுங்கிட்டு வந்துடறாங்க” என்கிறார் தூவைப்பதி பாலன்.

கேரளாவின் அட்டப்பாடி கிராமமான கோட்டத்துறையில் வசிக்கும் வெள்ளியங்கிரி பேசும்போது, “இங்கேயும் எங்க வீடுகள்ல நிறைஞ்சு கிடக்கிறது இந்த நூரே கிழங்குதான். ஊடு, ஊட்டுக்குக் காட்டுல போய்த் தோண்டிட்டு வந்து வச்சிருக்காங்க. அட்டப்பாடியில 192 ஊர்கள்ல பழங்குடிகள் இருக்காங்க. 90 சதவீதம் வீடுகள்ல இந்த கிழங்குக இல்லாம இருக்காது. கேரள அரசாங்கம் எங்களுக்கு நல்லா சப்போர்ட் பண்ணுது. அரிசி, பருப்பு வீட்டுக்கே கொடுத்துடுது. வீட்ல சும்மாயிருக்கறதுக்குப் பதிலா கிழங்கு, விறகு எடுக்கப் போறாங்க” என்றார்.

தூவைப்பதி பாலன், வெள்ளியங்கிரி ஆகியோர் முறையே தமிழகம், கேரளத்தில் வாழும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். ஆனைகட்டி, அட்டப்பாடி பழங்குடி கிராமங்கள் இருவேறு மாநிலத்தில் இருந்தாலும் இரு பகுதி மக்களின் வாழ்வியல் முறையும் ஒன்றுதான். பொது முடக்கத்துக்கு முன்னதாக இவர்கள் ஒன்றாகவே கலந்து வாழ்ந்தார்கள். இப்போதோ ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குள் நுழைய முடிவதில்லை. முன்பெல்லாம் இரு மாநிலப் பழங்குடி கிராமங்களிலும் பகல் பொழுதில் வீடுகளில் ஆட்களைப் பார்க்கவே முடியாது. இப்போதோ வீடுகளில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x