

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளில் 3 கொலை, 24 அடிதடி சம்பவங்களும், 22 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.
கரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் குற்ற சம்பவங்களும் அதிகரித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்குக்கு முன்னர் ஆங்காங்கே குற்றச்செயல்கள் நடைபெற்று வந்தன. முன்விரோதம், குடும்ப சண்டைகளால் கொலை சம்பவங்களும் நிகழ்ந்தன.
ஊரடங்கு காலத்தில் ஓரிரு சம்பவங்களை தவிர்த்து பெரும்பாலும் குற்றச்செயல்கள் இல்லை என்ற நிலையே காணப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதும், அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியதும் குற்றச்சம்பவங்களை குறைந்திருத்தன. இதுபோல் வாகன விபத்துகளும் வெகுவாக குறைந்திருந்தன.
இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளில் நடைபெற்ற கொலை, அடிதடி, விபத்து சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மாவட்டத்தில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
கூடங்குளம் போலீஸ் சரகத்தில் செட்டிக்குளத்தில் ஆர். ஜெயமணி (60) என்ற தனது தாயாரை அவரது மகன் ஆர். ராஜன் (42) குடும்ப தகராறில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். ராஜனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை போலீஸ் சரகத்தில் ராஜவல்லிபுரத்தில் முன்விரோதத்தில் டி. இசக்கிமுத்து (32) என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அம்பாசமுத்திரம் பிரம்மதேசத்தில் கட்டிட தொழிலாளி பி. ராஜேந்திரன் (35) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுபோல் 24 இடங்களில் அடிதடி சண்டங்களும், அதனால் பலர் காயமுற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் 22 விபத்துகளும் மாவட்டம் முழுவதும் நிகழ்ந்திருந்தன.
மது அருந்தியதுதான் இந்த கொலை, அடிதடி, விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருந்ததாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஊரடங்குக்குப்பின் மதுக்கடைகள் திறந்த முதல் நாளிலேயே குற்றச்செயல்கள் அதிகரிப்பது போலீஸாருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் அதேநேரத்தில் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.