

கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்குத் தங்கள் தெரு வழியே செல்ல எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் 94 டாஸ்மாக் மதுபானக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. காவல்காரன்பட்டியில் கிழக்கு காலனி தெரு அருகே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. காலனி தெரு வழியாக தான் டாஸ்மாக் கடைக்கு சென்று வர வேண்டும்.
ராச்சாண்டார் திருமலையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் காலனி தெரு வழியாக நேற்று டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்றுவந்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் கரோனா தொற்று அச்சம் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைக்கு காலனி தெரு வழியாக சென்று வர எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் பகுதியில் முட்செடிகளை வெட்டிப்போட்டுத் தடை ஏற்படுத்தி, டாஸ்மாக் கடைக்குச் சென்றுவர மாற்று வழி ஏற்பாடு செய்யவும், கடையை அங்கிருந்து அகற்றவும் வலியுறுத்திக் கடை முன்பு இன்று (மே 8) கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தோகைமலை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்ல மாற்று வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு மாதத்தில் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததை அடுத்து 4 மணி போராட்டத்தை அப்பகுதி மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.