

பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சிகை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் தங்களுக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த ஏதுவாக கோயில் நிர்வாகம் தற்காலிகமாக சிகை தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளது.
கோயில் நிர்வாகம் அமைத்துள்ள முடி கொட்டகையில் 330 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஊரடங்கு முன்பிருந்தே கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தவிர்க்க கடந்த 50 நாட்களுக்கு மேலாக கோயிலுக்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை.
இதனால் முடிகாணிக்கை செலுத்த பக்தர்கள் வராததால் சிகை தொழிலாளர்கள் வருவாயை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பழநி கோயிலில் பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் பணியில் ஈடுபடும் சிகை தொழிலாளர்கள் கூறியதாவது: கோயில் நிர்வாகம் சார்பில் மார்ச் மாதம் ரூ.ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்த நிதி போதுமானதாக இல்லை என கோயில்நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். வருமானம் இழப்பால் குடும்பச்செலவிற்கு பணம் இன்றி தவித்துவருகிறோம்.
கோயில்நிர்வாகத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு கோயில்நிர்வாகம், அரசு ஆகியவை கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும், என தெரிவித்துள்ளனர்.