

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த செங்கோட்டையைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் ராஜலெட்சுமி வழங்கினார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (31). சிஆர்பிஎப் வீரரான இவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சந்திரசேகர் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
உயிரிழந்த சந்திரசேகர், கடந்த 2014-ம் ஆண்டு ஆவடியில் சிஆர்பிஎப் வீரராக பணியில் சேர்ந்தார். 2 ஆண்டுகள் ஆவடியில் பணியாற்றிய பின்னர், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெனிபர் கிறிஸ்டி (27) என்ற மனைவியும், ஜான்பீட்டர் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
சந்திரசேகர் உடல் 3 நாட்களுக்குப் பின்னர் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரை விமானத்தில் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக அவரது சொந்த ஊருக்கு நேற்று இரவில் கொண்டுவரப்பட்டது.
சிஆர்பிஎப் வீரர் உடலை கொண்டுவந்த வாகனத்தின் மீது மூன்றுவாய்க்கால் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சந்திரசேகரின் வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சந்திரசேகர் உடலுக்கு அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மத்திய ரிவர்வ் காவல்படை டிஐஜி மேத்திவ் எ.ஜான், துணை கமாண்டன்ட் ஸ்ரீஜித், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முருகன், தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், செங்கோட்டை வட்டாட்சியர் கங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காவல்துறை சார்பிலும், சிஆர்பிஎப் சார்பிலும் தலா 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சந்திரசேகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.