

தமிழகத்தில் முதல்கட்டப் பொதுமுடக்கம் முடிந்த காலத்திலிருந்தே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும்; தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தற்போது பல கிராமங்களில் கரோனா தொற்று இல்லாத நிலையில் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆயினும் இதில் ஓரிரு சதவீத மக்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதாக இதன் பயனாளிகள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நிலைமை மோசம் என்கிறார்கள் தொழிலாளர்கள்.
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில் 1,198 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஊரக வேலை வாய்ப்புக்காக (100 நாள் வேலை திட்டம்) 1.19 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் ஏப்ரல் 27-ம் தேதி முதல், குறைந்த அளவு தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது வரை 152 கிராமங்களில் 2,561 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மற்றவர்கள் வேலை கிடைக்காமல் காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் தொழிலாளர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், “மாவட்ட அளவில் அனைத்துத் தொழில்களும் முடங்கிய நிலையில், ஊரக வேலைவாய்ப்புப் பணிகளில் அதிக அளவு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக் கோரிக்கை விடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் இல்லாத குக்கிராமங்களில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தொழிலாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் மாவட்ட அளவில், பதிவு செய்தவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே தொடர்கிறது.
எங்களுக்கு வேறு எங்கேயும் மற்ற வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. அங்கன்வாடி வேலை, குளம் குட்டை நீர் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளுக்காகக் காத்திருக்கிறோம். தனிமனித இடைவெளியுடன் பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் வேலையில் அதிக அளவு வழங்க ஊரக வளர்ச்சித் துறை முன்வர வேண்டும். அப்போதுதான் எங்கள் குடும்பங்கள் பசியாற முடியும்” என்றனர்.