

டாஸ்மாக் திறந்து ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காலகட்டத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது தமிழக அரசு. காலை முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் நின்ற வீடியோக்களும், பலர் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துகிடந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று டாஸ்மாக் திறப்பு தொடர்பாக தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மே 8) வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகலுக்குப் பிறகு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இதனிடையே, தற்போது கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.