

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான சந்தை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சந்தை 27-ம் தேதி வரை நடைபெறும்.
மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் விளங்குகிறது. இந்த பண்டிகையை கேரளாவின் `அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் 28-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள மெட்ராஸ் கேரள சமாஜம் சார்பில், மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான `ஓணச்சந்தா-2015’ என்ற சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்தையின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ராம் நவோதயா சிட் பண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.பி.சுரேஷ் பாபு சந்தையை தொடங்கி வைத்தார். அம்ருதா அம்பிகா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சிவன் அம்பிகா முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். சோலையில் சஞ்சீவனம் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ.வி.அனூப், சிவில் இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சலீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இச்சந்தை குறித்து, மெட்ராஸ் கேரளா சமாஜத்தின் பொதுச் செயலாளர் கும்ளங்காடு உன்னிகிருஷ்ணன் `தி இந்து’விடம் கூறியதாவது:
ஓணம் பண்டிகையை சென்னையில் வசிக்கும் கேரள மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக எங்கள் சமாஜம் சார்பில் `ஓணச்சந்தா’ என்ற பெயரில் சிறப்பு சந்தை அமைத்துள்ளோம். 23-ம் தேதி (நேற்று) முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் இச்சந்தையில் நேந்திரங்காய் சிப்ஸ், பாலடை, ஊறுகாய், பாராம்பரிய சட்னிப் பொடிகள், பப்படம் (அப்பளம்), கைக்குத்தல் அரிசி, வேட்டி, சேலை, நேந்திரம் பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இதற்காக, 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் அனைத்தும் சந்தை விலையை விட குறைவாக இருக்கும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்ராஸ் கேரள சமாஜம் வளாகத்தில் இச்சந்தை நடைபெறும். கடந்த ஆண்டு 7 டன் நேந்திரம் பழத்தை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்தோம். இந்த ஆண்டு 10 டன் நேந்திரம் பழத்தை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கும்ளங்காடு உன்னிகிருஷ்ணன் கூறினார்.