

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.3.65 கோடிக்கு மது விற்பனையானது.
கரூர் மாவட்டத்தில் ஒரு எலைட் மதுக்கடை உள்ளிட்ட 95 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் கரோனா தொற்றுள்ளவர் வசித்த தடை செய்யப்பட்ட பகுதியான என்.புதூரில் உள்ள ஒரு கடையைத் தவிர 94 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று (மே 7) திறக்கப்பட்டன.
43 நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது வாங்க வருபவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மதுக்கடைகள் முன் சவுக்குக் கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. டோக்கனுடன், ஆதார் நகல் வழங்கியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது.
அரசு அறிவித்த வயது வாரியான நேர முறையைப் பின்பற்றாமல் காலை முதல் மாலை வரை அனைத்து வயதினருக்கும் மது விற்பனை செய்யப்பட்டது. மது வாங்க வந்தவர்கள் டோக்கன் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று மீண்டும் கடையில் வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் ரூ.3.65 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முந்தைய நாளான மார்ச் 24-ம் தேதி ஒரே நாளில் ரூ.5.40 கோடிக்கு விற்பனையான நிலையில், 43 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் அதில் 68 சதவீதம் அளவுக்கு மட்டுமே மது விற்பனையாகியுள்ளது.
மது போதையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகைமலை காலனியைச் சேர்ந்தவர் ராஜா (48). ட்ரம் செட் வாசிப்பவர். இவர் தோகைமலை தெற்குபள்ளம் டாஸ்மாக் மதுக்கடையில் நேற்று மது வாங்கிக்கொண்டு அப்பகுதியில் உள்ள கிணற்றருகே உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர். போதையில் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புலியூரில் தர்ணா
புலியூரில் நேற்று மது வாங்க மாலை 4.50 மணிக்கு வந்த ஒருவருக்கு மது வழங்காமல் கடையை மூடியதால், அவர் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தியதை அடுத்து தர்ணாவைக் கைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
டாஸ்மாக் மதுக்கடை திறப்பைக் கண்டித்து பெண் ஆவேசம்
குளித்தலை பெரியபாலம் அருகே வாய்க்காலில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் நேற்று குளித்தார். அப்போது மது அருந்திவிட்டு குளிக்க வந்த இளைஞர்கள் சிலர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த அவர் வீட்டுக்குச் சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து அங்கிருந்த டாஸ்மாக் கடை முன் கடை திறந்ததைக் கண்டித்து ஆவேசமாக கூச்சலிட்டார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.