

திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் ஆகியவற்றை சீன மொழியாக்கம் செய்தவர் தைவான் கவிஞர் யூஷி. 35-வது உலகக் கவிஞர்கள் கூட்டமைப்புத் தலைவராகவும் இருந்தார். 2014-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருவள்ளுவர் விருதைப் பெற்றவர்.
இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். 2007-ல் 27-வது உலகக் கவிஞர்கள் மாநாட்டின்போது யூஷிக்கு கலாம் தங்க விருது வழங் கினார். பொன் புத்தர் சிலையையும் பரிசளித்துள்ளார். கிரேன் உச்சி மாநாட்டின்போது உயரிய தங்க விருதை கலாமுக்கு யூஷி வழங்கினார். அவரது அழைப்பை ஏற்று, தைவானில் 2010-ல் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கலாம் கலந்துகொண்டார். அவருக்கு மதிப்புறு விருது வழங்கி யூஷி பெருமைப்படுத்தினார்.
இந்நிலையில், கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ‘காலம் உள்ள வரை கலாம்’ என்ற பெயரில் கவிஞர் யூஷி ஒரு கவிதை எழுதியுள்ளார்.
‘‘அழகும் அமைதியும்
வளமும் செயல்திறனும்
உடையதாய் இந்தியத் திருநாடு
2020-ஆம் ஆண்டில் வல்லரசாக
மெய்ப்படுவது உன்
தொலைநோக்கின் வெளிப்பாடு!
அறிவுச்சுடரே!
எண்திசையிலும் எங்கள் தீவிலும்
உன் இன்சுவைக் குரல்
ஒலித்த வண்ணமிருக்கிறது.
கவின்மிகு பாரதத்தின்
குழந்தைகளையும்
இளைஞர்களையும்
வழிநடத்திச் சென்றவரே!
நீருள்ளளவும் நிலமுள்ளளவும்
காடுள்ளளவும் கவிதையுள்ளளவும்
வையம் உள்ளவரை
வாழும் உன் வான் புகழே!’’
என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.