

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோவை, நீலகிரி, சேலம், கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
குமரிக்கடல் மற்றும் மாலத்தீவையொட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் மதுரை, திண் டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும். இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு பொதுமக்கள், விவசாயிகள் காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருச்சியில் 105.62 டிகிரி பாரன்ஹீட்டும் தஞ்சை, சேலம், நாமக்கல், மதுரை, கரூர் பரமத்தி, தருமபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியும் பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 40 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடியில் 30 மிமீ, சிவகிரி, சித்தார், சிவலோகத்தில் தலா 20 மிமீ, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சங்கரன்கோவில், குன்னூர், செங்கோட்டை, தேவாலை, கூடலூர் பஜார், பிளவக்கல் ஆகிய இடங்களில் தலா 10 மிமீ மழை பதிவானது.