Published : 08 May 2020 07:57 AM
Last Updated : 08 May 2020 07:57 AM

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்

டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்பிரி யர்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் தமிழத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலை யில், மத்திய அரசு வெளியிட்ட சில தளர்வுகளின் அடிப்படையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதி ராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த நீதிபதிகள், பல்வேறு நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தனர். கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற மாவட் டங்களில் நேற்று காலை 10 மணிக்கு சுமார் 3,500 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட் டங்களில் மதுபானங்களை வாங்க காலை 8 மணி முதலே டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுப் பிரியர்களின் கூட்டம் கூடியது.

வயது வாரியாக நேரம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து வயதினரும் காலை யில் இருந்து மது வாங்க காத்தி ருந்தனர். போலீஸார் வயது வரம்பை கேட்டறிந்து வரிசையை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மதுபானம் வாங்க வந்தவர்களின் ஆதார் பரிசோதனை செய்யப்பட்டு ஆதார் அட்டை எண், பெயர், முகவரி குறிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர், காலை 10 மணி முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்கு கீழ் உள்ளவர்க ளுக்கு மதுபானங்கள் விற்பனை செய் யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடி, கடம்புத்தூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் சில மணி நேரம் காத்திருந்து மது பானங்களை வாங்கி சென்றனர். கும்மிடிபூண்டி அருகே உள்ள தேர்வாய் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் டாஸ்மாக் கடை களை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்ப டவில்லை.

இதற்கிடையே, மதுபானங் களின் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 180 மி.லி மதுபான பாட்டில்கள் ரூ.10, நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபானங்கள் ரூ.20 விலை உயர்த்தி விற்பனை செய்யப் பட்டது.

போலீஸார் தீவிர கண்காணிப்பு

திருச்சி மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளைத் தவிர்த்து 163 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. தஞ்சாவூர் அருகே விளாரில் காலை 7 மணி முதல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தஞ்சாவூர் மாநகரில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்ட கடைக ளிலும் நேற்று மது விற்பனை நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை, திரு வாரூர் பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படலாம் என்பதால் நாகூரை அடுத்த வாஞ்சூர், வாழ் மங்கலம்உட்பட 7 சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, மது வாங்கிச் சென்றனர்.

திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் மதுக்கடை திறப்பை பட்டாசுவெடித்து, கேக் வழங்கிக் கொண்டாடிய எஸ்.செல்லவேலு(55), எஸ்.சரவணன்(29), டி.அருண்(29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மலை மாவட்டமான நீலகிரியில் நண்பகலுக்கு பின்னர் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

முன்னாள் எம்எல்ஏ கைது

மதுரை மாவட்டத்தில் 250-க் கும் மேற்பட்ட கடைகள் திறக் கப்பட்டன. பெரும்பாலான கடை களில் ரூ.2,000, 500 நோட்டுகளை தாராளமாக கொடுத்து மதுபானங்களை வாங்கினர். வழக்கத்தைவிட 3 மடங்கு அளவுக்கு நேற்றுஒரே நாளில் மது விற்பனையாகி யுள்ளதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை செல்லூரில் உள்ள மதுக்கடையை திறக்க பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கடை அடைக்கப்பட்டது. திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, சத்திரம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைமுன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார்.

காலை 6 மணிக்கே வந்தனர்

சேலம் மாவட்டத்தில் 163, ஈரோடு மாவட்டத்தில் 143, நாமக் கல் மாவட்டத்தில் 158 கடைகள் திறக்கப்பட்டன. சில இடங்களில் காலை 6 மணி முதலே மது வாங்க மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். சில கடைகளில் மட்டுமே அரசு அறிவித்த நடைமுறைகள் பின் பற்றப்பட்டன. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டாஸ்மாக் மது பானக் கடைகளில் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் எலைட் டாஸ்மாக் மதுபானக் கடையில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது. வேலூர்மாவட்டத்தில் 55 கடை கள் திறக்கப்பட்டன. கோட்டா முறை யில் ஒரு நபருக்கு ஒரு லிட்டர் என கணக்கிட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன.

அச்சத்துடன் பணியாற்றும் ஊழியர்கள்

மதுபான விற்பனையில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐசியூசி) தலைவர் நா.பெரியசாமி கூறியதாவது:

ஊரடங்கால் பொது போக்குவரத்து இல்லாததால் தங்களுடைய இருசக்கர வாகனங்களை பயன்படுத்தித்தான் பணியாளர்கள் வேலைக்கு வர வேண்டியுள்ளது. அரசுத் தரப்பில் எந்த பயணப்படியும் தரவில்லை. சாப்பிடுவதற்கு போதிய நேரம் ஒதுக்கப்படாதது, நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் போன்ற காரணங்களால் மன உளைச்சலுடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் நீதிமன்றம் கூறியபடி அனைத்து நிபந்தனைகளையும் செயல்படுத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. பணியாளர்களுக்கு முகக்கவசம், கைகழுவும் திரவம் வழங்குவது, கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x