Published : 08 May 2020 07:51 AM
Last Updated : 08 May 2020 07:51 AM

முறையாக இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் பணியாளர்களை செல்ல விடாமல் தடுக்கும் மக்கள்- தேவையற்ற அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

காஞ்சிபுரம் அருகே மாங்கால் கூட்டுச் சாலையில் முறையாக அனுமதிபெற்று இயக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு பணியாளர்களைச் செல்ல விடாமல் சிலர் தடுக்கின்றனர். மக்கள் மத்தியில் நிலவும் தேவையற்ற அச்சத்தை போக்கமாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

கரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்குஅறிவிக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் கூட்டுச் சாலை பகுதியில் உள்ள சிப்காட்டில் இயங்கி வந்ததொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் மே 3-ம் தேதிஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பிறகுசில விதிமுறைகளுடன் தொழிற்சாலைகளை இயக்க அரசு அனுமதிஅளித்தது. அதன் அடிப்படையில் 30 முதல் 50 சதவீதம் வரை உள்ளூர் ஊழியர்களுடன் இந்த சிப்காட்டில் பல தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. தொழிலாளர்களும் வேலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு இடையூறு

இவ்வாறு வரும் தொழிலாளர்களை ‘நீங்கள் பணிக்குச் சென்று வருவதால் இந்த கிராமத்தில் கரோனா வரும், இதனால் ஊருக்குள் நுழையக் கூடாது’ என்று சிலர் மிரட்டி வருகின்றனர். மேலும்அவர்களை பணிக்குச் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் சாலையில் முட்களை வெட்டிப் போடுகின்றனர். சில கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக வந்து தொழில் நிறுவனங்களை மூடும்படி மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து இந்தப் பகுதிதொழிலாளர்கள் கூறும்போது, “உரிய அனுமதி பெற்று விதிகளையும் சமூக இடைவெளியையும் பின்பற்றியே எங்கள் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயக்கப்படுகின்றன. உரிய பாதுகாப்புடன் நாங்கள் பணி செய்கிறோம். ஆனால், எங்களை பணிக்குச் செல்லவிடாமல் தடுக்கின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக செல்பவர்களை தடுக்கமுடியாதவர்கள் எங்களை தடுக்கின்றனர்.

ஏற்கெனவே ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுவனங்கள் இயக்கப்படாத நிலையில் தொடர்ந்து பிரச்சினை கொடுத்தால் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி தொழிலாளர்களான நாங்களும் பாதிக்கப்படுவோம்.

திருவண்ணாமலை, காஞ்சிபுரம்மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் இங்கு அதிகம் பணிபுரிகின்றனர். 2 மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ள கரோனா தொற்று குறித்த தேவையற்ற அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிக்கு வரும் தொழிலாளர்களை தடுத்து தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடுபவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்தப் பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் த.தமிழினியன் கூறும்போது, “கரோனா தொடர்பான தேவையற்ற அச்சத்தை முதலில் அரசேபொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. இதனால் இப்போது தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் செல்ல முடியாத நிலைஏற்படுகிறது. கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் மிகக்குறைவு. இதனால் ஒட்டுமொத்தமாக முடக்கி வைக்க வேண்டிய தேவையில்லை. தொழிலாளர்களை உரிய பாதுகாப்புடன் பணிசெய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வெம்பாக்கம் வட்டாட்சியர் முரளி கூறும்போது, “இதுபோல் பணிக்கு வருபவர்களை தடுக்கக் கூடாது. வட்டாரவளர்ச்சி அலுவலர் மூலமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் அந்தப் பகுதி மக்களுக்கு எடுத்து கூறச்செய்து இப்பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

காலணி ஆலைக்கு எதிர்ப்பு

இதேபோல், செய்யாறு சிப்காட்வளாகத்தில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலையில் மரங்களைவெட்டிப்போட்டு தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்து வரும் வாகனங்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x