

2020ம் ஆண்டு தொடக்கத்தில் அபாயகரமான உயிர் கொல்லி நோயாக கருதப்பட்ட ‘கரோனா’ நோய், தமிழகத்தில் எதிர்கொள்ளக் கூடிய என்ற நிலையில் உள்ளது.
இந்த நோய் தொற்றுள்ளவர்கள் பெரும்பாலும் குணமடைந்து வீடுகளுக்குs செல்கிறார்கள். முதியவர்கள் தான் அதிகம் உயிரிழப்பை சந்திக்க நேரிடுகிறது. அதுவும் சொற்பமானவர்களே.
இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்தும், வந்தப்பிறகான சிகிச்சை மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமூக இடைவெளி, விலகி இரு, விழித்திரு போன்ற சுய ஒழுக்கமே இந்த நோயிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள முடியும்.
இந்த நோய் பற்றிய அதீத விளம்பரமும், பயமுறுத்தும் விஷயங்களும் இந்த நோய் வராதவர்களையும் மன அழுத்தத்திற்கும், பதட்டத்திற்கும் ஆளாக்குகிறது.
பலர் இந்த நோய் வராமலே வந்திருக்குமோ என்ற மன அழுத்தத்தில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மனநலன் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டவும், கவுன்சிலிங் வழங்கவும், இந்த நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும்,எம்எஸ் செல்லமுத்து அறக்கட்டளையும் இணைந்து 3 ஆயிரம் கல்லூரி மாணவர்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு 3 நாள் ஆன்லைனில் முறையான மனநலன் பயிற்சிகள் வழங்கி அவர்களை அவரவர் வசிக்கும் கிராமங்களுக்கு ‘கரோனா’ ஒழிப்பு பணிக்கு அனுப்ப உள்ளனர். இந்த ஆன்லைன் பயிற்சிவகுப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மனநலத்துறை பேராசிரியர்கள் குருபாரதி, கண்ணன், ஆன்லைனில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலன் பயிற்சி வழங்கினார்கள்.
இதுகுறித்து எம்எஸ் செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனமும், மனநல மருத்துவ நிபுணருமான டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ‘கரோனா’ தடுப்புப் பணியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம், மன அழுத்தத்தை போக்கவும் தன்னுடைய 100 கல்லூரிகளில் இருந்து 3 ஆயிரம் என்சிசி மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.
அவர்களுக்கு பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை மூலம் பயிற்சி பெற்ற மன நல மருத்துவ நிபுணர்களை கொண்டு மன நல பயிற்சி 3 நாட்கள் ஆன்லைனில் வழங்கி வருகிறோம். 3 நாள் பயிற்சி நிறைவடைந்தவுடன் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கிராமங்களுக்கு அனுப்ப உள்ளோம். பொதுவாகவே ‘கரோனா’ ஒழிப்பில் மக்களுடைய ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. எப்படி மக்களுக்கு வழிகாட்டலாம், விழிப்புணர்வு செய்யலாம் என்று நினைத்தப்போது அவர்களுடன் வசிக்கும் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு செய்தால் எளிதாக அவை மக்களை சென்றடைய வாய்ப்புள்ளது. அதற்காக மாணவர்களை தேர்ந்தெடுத்தோம்.
இவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பில், கரோனா வைரஸ், அதன் பரவல், வந்தால் என்ன பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும், உடல்ரீதியாக, மனரீதியாக அந்நோய் உண்டு பன்னும் விளைவுகள், வராமலே அச்சப்படுவோருக்கு அதிலிருந்து மீள கவுன்சிலிங் போன்ற வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கிறோம்.
பேரிடர் காலங்களில் எப்படி களப்பணியாளர்களுக்கு மக்களுக்கு உதவுவார்களோ அதுபோல் இந்த ‘கரோனா’ ஊரடங்கால் நாங்கள் பயிற்சி வழங்கும் மாணவர்கள் மக்களுக்கு முதலுதவி செய்வார்கள். அது விழிப்புணர்வாகவும் இருக்கும். மனநலன் சார்ந்த விஷயங்களாகவும் இருக்கும்.
கிராமங்களில் நோய் அறிகுறி இல்லாமல் பதட்டமும், பயமும் உள்ளவர்களை சந்தித்து பயிற்சியில் கற்றுக் கொண்ட விஷயங்களை சொல்லி புரிய வைக்க சொல்வோம். பயமும், பதற்றமும் அதிகமாக இருந்து அவர்களால் சமாளிக்க முடியாவிட்டால் எங்களிடம் கவுன்சிலிங்கிற்கு அழைத்து வரசொல்கிறோம்.
அதுபோல், நோய் அறிகுறி இருந்தால் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தி உள்ளோம். இந்நோய் வருவதற்கு முன் தினமும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை மாணவர்கள் அவர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்வார்கள்.
அதுபோல், இந்த ஊரடங்கால் குடிப்பழக்கத்தை விட்டு தற்போது விட முடியாமல் தவிப்பர்களை எங்களிடம் அழைத்து வந்து கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மாணவர்களின் இந்த சேவை,‘கரோனா’ தடுப்பில் அரசின் சுமையை குறைக்க உதவும். மாணவர்களும் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கான சுய மரியாதையும் கூடும், ’’ என்றார்.