

கிரானைட் முறைகேடு தொடர்புடைய ஆவணங்களை பிஆர்பி நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.
மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி நிறுவன பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட பலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த முறைகேடு காரணமாக பிஆர்பி கிரானைட் நிறுவனம் சீல் வைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப கேட்டு பிஆர்பி நிறுவனம் சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ஆவணங்களை பிஆர்பி நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேலூர் டிஎஸ்பி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் டிஎஸ்பி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
பின்னர் மேலூர் டிஎஸ்பியின் மனுவை ஏற்று பிஆர்பி நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.