ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திறக்கவிடாமல் செய்த பெண்கள்

ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திறக்கவிடாமல் செய்த பெண்கள்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு திறக்கவிடாமல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 121 கடைகளில் கரோனா தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 26 கடைகளைத் தவிர மீதியுள்ள 95 கடைகளை திறக்க அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன. சில கடைகளில் காலை 8 மணி முதல் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்புல்லாணி அருகே தினைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டதால், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கடையை திறந்தால் அடித்து நொறுக்குவோம் என பெண்கள் கூறியதால், அதிகாரிகள் கடையை திறக்காமல் திரும்பிச் சென்றனர்.

டாஸ்மாக் கடைகளை திறக்க திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, தங்களது வீடுகள் முன்பு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச் சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கமுதியில் உள்ள வீட்டிலும், மாநில தீர்மானக்குழு தலைவர் திவாகரன் பரமக்குடியில் உள்ள வீட்டிலும், முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் ராமநாதபுரம் வீட்டிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி தனது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.முகம்மது தலைமையில், மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர் உள்ளிட்டோர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in