Published : 10 Aug 2015 12:49 PM
Last Updated : 10 Aug 2015 12:49 PM

முழு மதுவிலக்கு கோரி ஆக.13-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம்

முழுமதுவிலக்கு கோரி தேமுதிக சார்பில் வரும் 13-ம் தேதியன்று ஒருநாள் அடையாள "உண்ணாவிரத அறப்போராட்டம்" நடத்தப்படும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதுவால் கணவனை இழந்த மனைவியும், மகனை இழந்த பெற்றோரும், தந்தையை இழந்த குழந்தைகளும் என பல குடும்பங்கள் கஷ்டபடுகின்றன.

சமீபத்திய ஆய்வில் தமிழகத்தில் மட்டும் மது அருந்தும் பழக்கத்தால், கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்றவைகள் பாதிக்கப்பட்டு, சுமார் 65 ஆயிரம்பேர் உயிருக்குபோராடும் நிலையிலும், கடந்த பத்தாண்டுகளில் குடிப்பழக்கத்தால் மட்டும் சுமார் இரண்டு லட்சம்பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கொடிய விஷத்திற்கு சமமான மதுவை ஒழிக்கவேண்டுமென்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரை இழந்தும், கல்நெஞ்சம் கொண்ட அரசாக, இந்த அதிமுக அரசு இருக்கிறது.

தமிழகத்தில் மதுவை அறவே ஒழிக்கவேண்டும், அதற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கொள்கையாகும். தமிழக மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக அரசு உடனடியாக துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழக வளாகத்தில், வருகின்ற 13.08.2015 வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை தேமுதிக சார்பில் ஒருநாள் அடையாள "உண்ணாவிரத அறப்போராட்டம்" கழகத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.

அது சமயம் தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக வருகைதந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு, மாபெரும் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x