

தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து இன்று (மே 7) திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தென் மாவட்டங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்தது.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி., திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் பூமிநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சரவணன், விசிக மாவட்டச் செயலாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மதுக்கடைத் திறப்பிற்கு எதிராகவும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் மக்களுக்குத் தேவையான பொருட்களை முறையாக வழங்கிடக் கோரியும் முழக்கங்கள் இடப்பட்டன.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், மதுரை மீனாம்பாள் புரத்தில் முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் உள்ள தனது வீட்டு முன்பு கருப்புச் சட்டை அணிந்து பதாகையை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கட்சி நிர்வாகிகளும் சமூக இடைவெளி விட்டு நின்றபடி, 'குடிகெடுக்கும் அதிமுக அரசு' என்று கோஷமிட்டனர். இதேபோல தென்மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் தங்கள் வீடுகளில் இருந்தவாறே போராட்டம் நடத்தினார்கள்.