அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்வு; வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்; முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரித்துள்ள உத்தரவை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 7) வெளியிட்ட அறிக்கையில், "அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றி வருவோரின் ஓய்வு வயது 58 என்பதை 59 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் 31.05.2020 ஓய்வு பெறுவோர் அனைவரும் மேலும் ஓராண்டு காலம் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி பெற்று, பல்வேறு திறன்களில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் உட்பட ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும்போது, அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் கூட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்தி இருப்பது வேலையின்மை வேதனையில் வீழ்ந்து கிடப்பவர்களை வஞ்சிப்பதாகும்.

மேலும், பணியில் உள்ளோரின் பணி உயர்விலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை தேடி வருவோருக்கும், வேலையில் இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in