

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை சேவை துவங்கப்பட்டது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் வேளையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கும் வகையில், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம், பட்டணம்காத்தான் டிபிளாக் ஆகிய 3 இடங்களில் தற்காலிக காய்கறி, பழங்கள், பூ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட உள்ளது.
மேலும், தற்போது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து சிரமமின்றி காய்கறிகள் வாங்க நடமாடும் காய்கறி விற்பனை சேவையை இன்று ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் துவங்கி வைத்தார். அதன்படி ராமநாதபுரம் நகரில் 5 நடமாடும் காய்கறி வாகனங்கள் விற்பனை நேற்று துவங்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, மாவட்டத்தில் தற்போது 15 நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, விற்பனை துவங்கப்பட்டுள்ளது. விரைவில் 50 வாகனங்களில் விற்கப்படும். தினமும் 25 டன் காய்கறிகளும், 40 டன் பழங்களும் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 28 பேரில் 15 பேர் மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். இந்த 15 பேரும் அரசு மருத்துவமனை மற்றும் தனி இடங்களில் தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.