

தமிழகத்தில் ஊரடங்கால் கூடை முடையும் தொழில் முடங்கியதால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் குறிஞ்சி நில குறவர் இன மக்கள் மூங்கில், ஈஞ்சி குச்சிகள் மூலம் கோழிபஞ்சாரம், சமையல் வடிகட்டும் கூடை, காய்கறி கூடை, பூக்கூடை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இத்தொழிலில் சிவகங்கை மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பல்வேறு தொழில்களிலும் முடங்கியுள்ளன. இதில் கூடை முடையும் தொழிலும் முடங்கியதால், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனவேங்கைகள் கட்சி மாநிலத் தலைவர் இரணியன் கூறியதாவது: ஏற்கனவே பிளாஸ்டிக் வருகையால் கூடை முடையும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இல்லாததால் அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தோர், பதிவு செய்யாதோர் என்ற பாகுபாடின்றி நிவாரண நிதி வழங்க வேண்டும். அரிசி , மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
ஊரடங்கிற்கு பிறகு சுற்றுச்சூழல் பாதிக்காத கூடை முடையும் தொழிலை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்க வேண்டும், என்று கூறினார்.