Published : 07 May 2020 05:02 PM
Last Updated : 07 May 2020 05:02 PM

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் நமக்கு பொருத்தமாகத் தெரியவில்லை: கரோனா பரவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.தாமோதரன் பேட்டி

“2004 சுனாமியில் நாகையில் 6,065 பேர், கடலூரில் 1,050 பேர், குமரியில் 521 பேர் பலியானபோது, ‘இனி இங்கே தொற்று நோய்களால் குறைந்தது 1 லட்சம் பேர் பலியாவதைத் தவிர்க்க முடியாது’ என்று உலக சுகாதார நிறுவனம் சொன்னது. அதை நாங்கள் பொய்யாக்கி ஒரு தொற்றுநோய் மரணம்கூட ஏற்படாமல் பார்த்துக்கொண்டோம்” என்று நினைவுகூர்கிறார் டாக்டர் ஆர்.தாமோதரன்.

சென்னை, திண்டுக்கல், ஈரோடு, நாகை, கோவை சுகாதார மாவட்டங்களுக்கான துணை இயக்குநராகத் தலைமைப் பொறுப்பை வகித்தவர் தாமோதரன். சுனாமியின்போது நாகையில் சாந்தஷீலா நாயர் தலைமையிலான 15 குழுக்களின் ஒருங்கிணைப்புப் பணியில் இருந்தவர். தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த தொற்றுநோய் கண்காணிப்புத் திட்டத்தின் (ஐடிஎஸ்பி) கீழ் கரோனா கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறார். அவர் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அளித்த பேட்டி.

ஐடிஎஸ்பியின் பணிகள் என்னென்ன?
காவல் துறையில் உளவுப் பிரிவுகள் இருப்பதுபோல பொது சுகாதாரத் துறையில் தொற்றுநோய்க் காலங்களில் அது குறித்துக் கண்காணித்து அரசுக்குப் புள்ளி விவரங்கள் அனுப்பப் பல பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று ஐடிஎஸ்பி. ஒருங்கிணைந்த தொற்றுநோய் கண்காணிப்புத் திட்டம். அதன் உட்பிரிவு எஸ்பிஎச்ஐ SBHI (State Burea Of Health Intelegence). அண்டை மாநிலங்கள், மாவட்டங்களில் நோய்த் தொற்றுத் தகவல் தெரிந்தவுடனே விவரங்களைச் சேகரிப்பது இதன் முக்கியப் பணி.

குறிப்பாக, தொற்றுநோய் எங்கே, எப்படிப் பரவுகிறது, அங்கே நோய் அதிகரிக்கிறதா, புதுவிதமான நோய் ஏதும் வந்துள்ளதா, வரும் வாய்ப்புள்ளதா என்பதைப் புள்ளிவிவரமாக எடுத்துப் பொது சுகாதாரத் துறை மூலம் அரசை உஷார்படுத்துவது போன்ற பணிகளை இது செய்கிறது.

கரோனா தடுப்புப் பணியில் இதன் பங்கு என்ன?
ஒருவருக்குக் கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன், அது யாருக்கெல்லாம் எப்படி பரவியிருக்கிறது, பரவ வாய்ப்பிருக்கிறது என்பதை நேரடியாகக் குழுவுடன் போய் கண்காணிக்கிறோம். தொற்று உண்டான பகுதிகளில் கிருமிநாசினி பயன்படுத்தும் பணிக்கு உத்தரவிடுவதுடன், களப் பணியாளர்களை வைத்து அதை நேரடியாகச் செய்து முடிப்பது என நிறைய செய்திருக்கிறோம். அநேகமாக கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பான்மையான கரோனா தொற்று நோயாளிகளை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.

இப்போது உங்களுடைய மண்டலத்தில் கரோனா தொற்றுப் பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது?
ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் எகிறியது. இப்போது அரசு கரோனா வார்டில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 6 பேர் என்ற அளவில்தான் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுவும் சீக்கிரம் பூஜ்யம் நிலைக்கு வந்து விடும். ஓடி ஓடித் துவண்ட களப் பணியாளர்கள் இப்போதுதான் கொஞ்சம் ஓய்வுக்கு வந்திருக்கிறார்கள்.

கரோனா அச்சம் எப்போதுதான் ஒழியும்?
அதை உலக சுகாதார நிறுவனம்தான் சொல்ல வேண்டும். ஈரோடும் கோவையும் ஆரஞ்சு வண்ணத்துக்கு மாறிவிட்டன என்பதெல்லாம் நமக்கான சமாதானம். ‘இன்குபேஷன் பீரியடு’ 14 நாட்கள். நோய்த் தொற்று குணமானதை உறுதிப்படுத்த 14 நாட்கள். மொத்தம் 28 நாட்கள். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் கழித்து மற்ற யாருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்படவில்லை என்றால் மட்டுமே கரோனா இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும். ஒரு வேளை, 29-வது நாள் ஒருவருக்குக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் மறுபடி 28 நாட்கள் ஒருவருக்கும் கரோனா இல்லா நிலை வர வேண்டும்.

தடுப்பு மருந்து எப்போது சாத்தியம்?
கரோனா வைரஸ் 2019 டிசம்பரில் வந்தது. இப்போது அதுவே 10 ரகமாகிவிட்டது. முதலாவது ரகத்திற்கே தடுப்பு மருந்தில்லை. தமிழகத்தில் ஆச்சரியமான விஷயம் கரோனா நோய் கண்ட பெரும்பாலானவர்களுக்கு நோய் அறிகுறி அறவே இல்லை. அமெரிக்காவில் 10 பேருக்கு 10 பேர் வென்டிலேட்டர் போடுறாங்க. தமிழ்நாட்டில் இதுவரை 20 பேருக்கே வென்டிலேட்டர் தேவைப்பட்டிருக்கு. என் தொற்று நோய் அனுபவத்தில் ‘ஒரு பாக்டீரியா, அல்லது வைரஸ் தொற்றானது நோயாகப் பரவும்போது, ஆரம்ப வேகம் கடைசி வரை இருக்காது. ஒருவருக்குப் பரவும்போது அவரிடம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியுடன் மல்லுக்கட்டி, வீரியம் குறைந்த நிலையில்தான் அடுத்தவருக்கு தொற்றுகிறது. அதில் நிச்சயம் வீரியம் இருக்காது.

கரோனா இப்ப வீரியம் குறைஞ்சிருக்கா இல்லையா என்பற்கு நம்மிடம் ஆய்வுகள் ஏதும் இல்லை. ஒரு நோய்க்கு மருந்து கொடுத்து குணமானால்தான் அவங்க சிகிச்சையில் குணமானதா அர்த்தம். அறிகுறியே இல்லாமல் தானா குணமாகிறவர்களை எப்படி அந்தக் கணக்குல வைக்க முடியும்? இதுக்கு என்ன அர்த்தம்னா ஒண்ணு கரோனா வைரஸ் வீரியம் குறைஞ்சிருக்கணும், இல்லை. கரோனா வந்ததால நம்மவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருக்கணும். அதனாலதான், நமக்கான கரோனா அனுபவமே வேற. அமெரிக்கா, இத்தாலியைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லைன்னு சொல்றேன்.

கரோனா - சுனாமி இரண்டு மீட்புப் பணிகளையும் எப்படி பார்க்கிறீர்கள்?
கரோனா உலக அளவில் பாதிச்சிருக்கு. சுனாமி பாதிப்பு கடலோர மாவட்டங்களில் மட்டுமே. மன பாதிப்பு, தொற்று நோய் பயம் இரண்டிலும் பொதுவானது. சுனாமியில், காயம்பட்டவங்களுக்கு சிகிச்சையளிப்பதும், கொத்துக் கொத்தாகச் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகளும் பெரிய சவாலாக இருந்தன. சுனாமி பாதித்த மாவட்டவாசிகள் அத்தனை பேரும் மாஸ்க் போட்டாங்க. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி வரை கடைகளில் மாஸ்க் எல்லாம் கிடைக்காமப் போச்சு. இறந்தவர் உடல்களை குழிகள் தோண்டி நாங்கதான் மண்போட்டு மூடினோம். அங்கே தொற்றுநோய்களால் 1 லட்சம் பேர் வரை பலியாகலாம்னு சொன்ன உலக சுகாதார நிறுவனம் அதைத் தடுக்க வழிகாட்டுதல் ஏதும் தரவில்லை. நாங்களே நோய்த் தடுப்பு முறைகளை உருவாக்கிக் கொண்டோம்.

இப்போது கரோனாவுக்கு உலக சுகாதார நிறுவனம்தான் வழிகாட்டுதல் தருகிறது. அது நம்முடைய இடத்திற்கு பொருத்தமானதாகத் தெரியவில்லை. நமக்கான தடுப்பு முறைகளை நாமேதான் முறையாக வகுத்துக்கொள்ள வேண்டும். இது நமக்கு சுனாமி கற்றுக்கொடுத்த பாடம்.

இவ்வாறு டாக்டர் ஆர்.தாமோதரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x