Published : 07 May 2020 04:45 PM
Last Updated : 07 May 2020 04:45 PM

கரோனா நோய்த்தடுப்புப் பணியில் சிறைக் கைதிகளை ஈடுபடுத்தக் கோரி மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புக்கும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் தன்னார்வலர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “சிறைகள் சட்டப்படி, கைதிகளை சமூக சேவைகளில் ஈடுபடுத்தி சீர்திருத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறை மற்றும் மாவட்டச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்..

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைதிகளை சிறைக்கு வெளியில் பணியில் அமர்த்துவது என்பது அபாயகரமானது. அவர்கள் தப்பியோட வாய்ப்புள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதால், சிறைக் கைதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது” என வாதிட்டார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறைகளிலேயே கைதிகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் அவர்களைச் சிறைக்கு வெளியில் அழைத்து வந்து பணியமர்த்த வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x