

கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்குப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி, சாமிக்குப் பூஜை செய்து, ஓமலூர் எம்எல்ஏவுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நிவாரணப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அரசு நிபந்தனைகள் அடிப்படையில் முக்கிய, அத்தியாவசியக் கடைகள், நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு கட்சி, அமைப்பினர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கும் நிவாரணப் பொருட்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல், கருப்பூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பொதுமக்களுக்கு இன்று (மே 7) நிவாரணப் பொருட்களை வழங்கினார். முன்னதாக, கருப்பூர் மாரியம்மன் கோயிலில் பூசாரிகள் மூலம் சாமிக்குப் பூஜை செய்யப்பட்டு, எம்எல்ஏ வெற்றிவேலுக்குப் பரிவட்டம் கட்டப்பட்டது.
சாமியை வழிபட்ட பின்னர், எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் கட்சியினர் நெருக்கமாக நின்று, தனிமனித இடைவெளியை மறந்து, நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக அரசு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோயிலுக்குத் திரளாகச் சென்று, சாமிக்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டனர். மேலும், கோயில் வளாகத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்காமல், அருகருகே நின்று பொதுமக்களுக்குக் கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும்கட்சியினரே அரசின் உத்தரவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்களை முன்னிலைப்படுத்தி கரோனா தொற்று அபாயத்தை அலட்சியம் செய்த செயலைக் கண்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.