

சேலத்தில் மதுபாட்டில் வாங்க ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் டோக்கன் விநியோகிக்கப்பட்டதால், கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கில் முக்கியத் தொழில்கள், கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இன்று (மே 7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரு மணிநேரத்துக்கு 50 பேருக்கு என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது. ஆதார் எண்களைப் பதிவு செய்து கொண்டு, மதுப்பிரியர்களுக்கு டோக்கன்கள் பல இடங்களிலும் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் காமலாபுரம் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மதுபாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்ககளுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
பள்ளிக் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிக்கும் வகுப்பறை வளாகத்தை மதுபாட்டில்கள் வாங்கிட டோக்கன் விநியோகிக்கும் இடமாக மாற்றியதைக் கண்டு, கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பள்ளிக்கூடத்தில் டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.
மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தை மதுபாட்டில் வாங்க டோக்கன் வழங்கும் இடமாக மாற்றியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.