

பச்சை மண்டலமாக மாறிய பிறகே புதுச்சேரி மாநிலத்தில் மது, சாராயம், கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாவட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், காரைக்காலைச் சுற்றியுள்ள அண்டை மாநிலமான தமிழகத்தின் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற மண்டலங்களாக நீடிக்கின்றன. புதுச்சேரி மாவட்டம் சற்று அதிகம் அபாயம் உள்ள ஆரஞ்சு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் சென்னை மாவட்டங்கள் மிக ஆபத்தான நிலையில் கரோனா தொற்று பரவும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அதேபோல புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை மாவட்ட மக்களுக்கு இடையே தொப்புள்கொடி உறவு இருப்பதால் இருதரப்பில் இருந்து எல்லை தாண்டிய ஊடுருவல் அதிகம் இருக்கும்.
மேலும், தொற்று பரவும் அபாயத்தை ஊக்குவிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் சாராயம் மற்றும் மதுபானங்களின் விலை மலிவு, அண்டை மாநில நுகர்வோரை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. அதனால், தமிழகத்தின் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஏற்கெனவே தொற்று உடையவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்குள் ஊடுருவினால் யூனியன் பிரதேசத்தில் கட்டுக்குள் இருக்கும் கரோனா தொற்றுப் பரவல், கட்டுக்கடங்காமல் போகலாம்.
எனவே, வருமுன் காப்போம் கொள்கையை உறுதியோடு கடைப்பிடிக்க, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சுற்றியுள்ள தமிழகத்தின் ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்கள் பச்சை மண்டலங்களாக மாறிய பிறகே புதுச்சேரியில் மது, சாராயம், கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும்.
வருவாயைப் பெருக்க மதுபானங்களின் விற்பனையைத் தொடங்க மத்திய அரசு வழிகாட்டுதலை அறிவித்துவிட்டது. ஆனால், சுகாதாரம் என்பது மாநில அரசின் கொள்கை. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.