

புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கு வந்த முதல்வரிடம் வாக்குவாதம் செய்து கூச்சலிட்டனர். இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் முடிவு வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் 3 பேருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சொர்ணாநகர் மற்றும் அம்பேத்கர் நகர், பி.சி.பி. நகர், கோட்டைமேடு, சிவகாமி நகர், கண்ணம்மா தோட்டம், அருந்ததிபுரம் உள்ளிட்ட அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்து பகுதிகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் சீல் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. கடந்த 4-ம் தேதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தளர்வுகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமல்படுத்தப்படவில்லை. அதேசமயம் அப்பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் 37 நாட்கள் ஆகியும், மேற்கொண்டு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதனால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொகுதி எம்எல்ஏ ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
இந்நிலையில், சொர்ணாநகர் பகுதி சீல் வைக்கப்பட்ட தினத்தில்தான் முத்தியால்பேட்டைக்கும் சீல் வைக்கப்பட்டது. தற்போது முத்தியால்பேட்டையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. எனவே தங்கள் பகுதியிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி மேற்குப்பஞ்சாயத்து மக்கள் நேற்று காலை அரியாங்குப்பம் புறவழிச்சாலை போக்குவரத்து சிக்னல் அருகே திரண்டனர். முதல்வரை இப்பகுதிக்கு இன்று அழைத்து வருவதாக தொகுதி எம்எல்ஏ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 7) காலை மக்கள் மீண்டும் அரியாங்குப்பம் புறவழிச்சாலை போக்குவரத்து சிக்னல் அருகில் மீண்டும் கூடினர். அதுபோல் ஜெயமூர்த்தி எம்எல்ஏ, அப்பகுதி மக்களிடம் நேற்று உறுதியளித்தபடி இன்று காலை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்தார்.
அப்போது முதல்வர் நாராயணசாமி மக்கள் மத்தியில் பேசுகையில், "இப்பகுதியைச் சேர்ந்த நபருக்கு இன்று கரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு கரோனா இல்லை என்று வந்தால் குறுகிய காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கு பஞ்சாயத்து பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக புதுச்சேரி அரசை கேட்காமல் மத்திய அரசு அறிவித்துவிட்டது. அதனால் கட்டுப்பாட்டு தளர்வை அறிவிக்க மத்திய அரசின் அனுமதியை கேட்க வேண்டிய கடமை உள்ளது. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்தோர், "அதிகாரம் இல்லாமல் ஆய்வுக்கு வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்டுப்பாடுகளை தளர்த்த கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, "மத்திய அரசுக்கு இதுதொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன். தொலைபேசியிலும் பேச உள்ளேன். அவ்விஷயத்தில் முடிவு வந்த பின்னர் இப்பகுதியில் கட்டுப்பாடுகளை தளர்த்த குறுகிய காலத்தில் முடிவு எடுப்போம்" என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.