

வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்கள் இருந்து வருவோரை கண்டறிய தூத்துக்குடியில் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, டைனமிக் அரிமா சங்கம், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பந்தல் மற்றும் கலைக்குழுவினர், சமையல் பணியாளர்கள், சுமை ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக முதல்வர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை காரணமாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,940 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதலில் 27 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து 17 நாட்கள் எந்தவித அறிகுறியும் இல்லாத நிலையில், 2 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தவர். மற்றொருவர் சென்னையிலிருந்து முறையான அனுமதி எதுவும் பெறாமல் வந்தவர். அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் தலைநகர் சென்னையில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் சூழ்நிலை உள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் ஆய்வு கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மாவட்டத்தில் 15 பிரதான இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்கள் இருந்து வருவோரை கண்டறிந்து, அவர்களை கண்டிப்பாக 28 நாட்கள் தனிமைப்படுத்த தேவையான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குறுக்குச்சாலைகளிலும் 45 இடங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த வகையிலும் யாரும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரியாமல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவதை கட்டுப்படுத்தும் பணி மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது.
சுய ஊரடங்குக்கு முன்பாக என்னென்ன கடைகள் செயல்பட்டனவோ அவற்றுக்கு படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் எடுத்த உடனேயே மதுபான கடைகளை திறக்க அரசு உத்தரவிடவில்லை.
முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஊரடங்கு நிறைவு பெறும் வேளையில் சுமார் 90 சதவீத பணிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல்தான் மதுக்கடைகளுக்கும். இவை ஏற்கனவே இயங்கி வந்தது தான். புதிதாக திறக்கப்படவில்லை. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருந்த மாநிலத்தில் புதிதாக மதுக்கடைகளை திறப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். ஏதோ இல்லாத ஒன்றை புதிதாக தொடங்கியது போல அரசியலுக்காக சித்தரிக்கிறார்கள்.