

திருப்பூர் மாவட்டத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி சாலையில் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட நியூ திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணி செய்து வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வு காரணமாக திருப்பூரில் 43 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் பின்னலாடை நிறுவனங்கள் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வட மாநில பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி இன்று (மே 7) நியூ திருப்பூரில் உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் டயர்களுக்குத் தீ வைத்து கோஷங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை செய்யும் நிறுவனங்கள் மூலமாக ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் போராட்டத்தைத் தூண்டியதாக அவர்களில் 15 பேரை பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.