

மது என்ன நோய்த்தடுப்பு மருந்தா? ஏன் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (மே 7) தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது குறித்து, முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:
"கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அரசின் கட்டளையை ஏற்று ஒட்டுமொத்த மக்களும் ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? அரசாங்கம் இதுகுறித்து நிச்சயம் யோசிக்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தேர்வுகள் நடத்தப்படவில்லை. எந்த மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவில்லை. வியாபாரங்கள் நடக்கவில்லை, தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. மக்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் என்ன?
நான் மற்ற மாநிலங்கள் குறித்துப் பேசவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தில் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் யாருக்கும் வருமானம் இல்லை. திருமணங்கள் கூட நடக்கவில்லை. டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நிச்சயமாக குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும். இருக்கும் சொற்பப் பணத்தை வைத்து மது வாங்கத்தான் மதுப்பிரியர்கள் நினைப்பார்கள். அப்படியென்றால் பெண்கள் எப்படி குடும்பத்தை நடத்துவார்கள்? குடும்பங்களுக்கு வருமானம் இல்லாதபோது ஏன் அரசாங்கம் அதன் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்கிறது.
மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம், அவை நமக்கு வேண்டாம். மதுக்கடைகளை மூட வேண்டும் எனச் சொன்னதும் அரசு தான், இப்போது திறப்பதும் அரசுதான். எதையும் மக்கள் கேட்கவில்லை. உங்களுடைய தேவைக்கு மூடுகிறீர்கள், உங்களின் தேவைக்குத் திறக்கிறீர்கள். இது ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருந்தால்தான் அந்த அரசு நல்ல அரசாகக் கருதப்படும்.
மதுக்கடைகளைத் திறந்திருப்பது நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கப்படக்கூடிய விஷயம். அரசு இதனை மறுபரிசீலனை செய்து ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். மதுவினால் எந்தப் பயனும் இல்லை. பெண்கள் இன்றைக்குப் போராடுகிறார்கள்.
மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் தொற்றுப் பரவல் அதிகமாகும். மது என்ன நோய்த்தடுப்பு மருந்தா? இது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். மதுக்கடைகளை மூடியபோது வன்முறை இருந்ததா? கேரள அரசு திறக்கவில்லை. தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.