

ஏழை, எளிய மக்கள் நிவாரணம் பெறுவதற்கு ஆதாரமாக விளங்குவதே ரேஷன் கார்டுகள்தான். ஆனால், ரேஷன் கார்டுகள் இல்லாத மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதும், அதன் காரணமாகவே அரசின் நலத் திட்டங்களையும் நிவாரண உதவிகளையும் இழக்கிறார்கள் என்பதும் பலரின் கவனத்துக்கு வராத விஷயங்கள்.
ஈரோடு மாவட்டத்தில், 54 குடும்பங்கள் வசிக்கும் அக்னிபாவி என்ற பழங்குடி கிராமத்தில் 34 குடும்பங்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டுகள் உள்ளன. இதேபோல் இங்கே நல வாரிய அட்டை இல்லாத குடும்பங்கள் 46. இங்கே வசிக்கும் மொத்தம் 182 பேரில் 56 பேருக்கு ஆதார் கார்டும், 40 பேருக்கு காப்பீட்டு அட்டையும், 115 பேருக்கு சாதிச் சான்றிதழ்களும் இல்லை என்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் அரசின் கரோனா நிவாரணப் பொருட்கள், சலுகைகள், மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலில் இம்மக்கள் இருக்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைகளில் தாமரைக்கரை, தாளக்கரை, தொள்ளி, ஒண்ணகரை, தம்புரெட்டி, ஒசூர், கூலி நத்தம், கிழக்கு மலையில் ஒந்தனை, தேவர் மலை, வெப்பக்காம்பாளையம், மடம் பர்கூரைச் சுற்றி ஊசிமலை, சோளக்கணை, குட்டையூர், கத்திரி மலை என 33 பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவற்றில் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 28 சதவீதம் காடுகள்தான். இவற்றில் 120 பழங்குடி கிராமங்கள் உள்ளன. இவை ஒரு காலத்தில் வீரப்பன் காடுகளாக அறியப்பட்டவை. இதில் பர்கூர் மலைகளில் மட்டும் 33 குக்கிராமங்கள் உள்ளன. பேருந்துப் போக்குவரத்தையே கண்டிராத இந்தக் கிராமங்களுக்குச் சமீபத்தில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற தன்னார்வ அமைப்பினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். காரணம், இந்தக் கிராமங்களில் வசித்தவர்களில் பெரும்பான்மையினருக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், காப்பீடு அட்டை என எதுவுமே இல்லை.
இப்படியான சூழலில், அரசின் நிவாரண உதவிகள் எப்படி சென்று சேர்ந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தன்னார்வ அமைப்பினர், வெறுமனே குத்துமதிப்பாகக் கணக்கிட்டு இவர்களுக்கான ரேஷன் கார்டு இல்லை என்று சொல்வதைவிட புள்ளிவிவரத்துடன் அரசிடம் அளிக்கவும், அதை அடியொற்றி கோரிக்கை எழுப்பவும் முடிவு செய்தனர்.
இதையே கடந்த 4-ம் தேதி 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில், ‘ரேஷன் கார்டு இல்லை; நிவாரணமும் இல்லை: அரசு ஆவணங்கள் இல்லாமல் அல்லாடும் பர்கூர் மலைவாசிகள்’ எனும் தலைப்பில் செய்தியாக வெளிப்படுத்தியிருந்தோம். இதையடுத்து இப்போது இந்த தன்னார்வ அமைப்பினர் இப்பகுதிகளில் உள்ள பழங்குடி கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இதற்கான கணக்கெடுப்பைத் தொடங்கிவிட்டனர். சத்தியமங்கலத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘சுடர்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் இருசக்கர வாகனங்களிலும், காடுகளில் நடந்து சென்றும் இந்தக் கணக்கெடுப்பை நடத்திவருகின்றனர். அந்த வகையில், பர்கூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்னிபாவி என்ற பழங்குடி கிராமத்தைக் கணக்கெடுத்தபோதுதான் மேற்படி புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘சுடர்’ அமைப்பின் நிறுவனர் நடராஜன், “ஏற்கெனவே கொங்காடையைச் சுற்றியுள்ள 3 மலைக் கிராமங்கள் மற்றும் விளாங்கோம்பை கிராமத்தைத்தான் தோராயமாகக் கணக்கெடுத்து நாம் சொல்லியிருந்தோம். இப்போது துல்லியமான கணக்கெடுப்புப் பணியை அக்னிபாவி, ஜியான்தொட்டி போன்ற கிராமங்களிலிருந்து தொடங்கியிருக்கிறோம். இவர்களில் பாதிப் பேரிடம் அடிப்படையான அரசு ஆவணங்கள்கூட இல்லாததால், ரேஷன் பொருட்களோ, நிவாரணத் தொகையோ போய்ச் சேரவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் 33 கிராமங்களில் எங்கள் குழுவினர் கணக்கெடுப்பை முடித்துவிடுவர். அதற்குப் பிறகு அரசு அலுவலர்களிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்” என்று சொன்னார்.
இதுபோன்ற பணிகள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளும், நிவாரண உதவிகளும் சென்று சேரும்.